×

என் வாழ்க்கை பயணம் என்னை பக்குவப்படுத்தி உள்ளது!

நன்றி குங்குமம் தோழி

திருநங்கை ப்ரீத்திஷா

‘‘வாழ்க்கை அடுத்த நொடி யாருக்கு என்ன வைத்திருக்கு என யாருக்கும் தெரியாது’’ எனும் வாக்கியத்திற்கேற்ப, தன்னுடைய பதிமூன்று வயதில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என தெரியாமல் தவித்தார். தனக்கு பிடித்த கல்வி மற்றும் குடும்பத்தை விட்டு விலக வேண்டிய நிலை. மொழி புரியாத ஊரில் ரயிலில் கீ செயின் விற்றார். உணவினை டெலிவரி செய்யும் வேலை பார்த்தார். தனியாளாக பல இன்னல்களை சந்தித்தவர், நடிக்க வேண்டும் என்ற கனவினை நினைவாக்கியது மட்டுமில்லாமல், விட்ட கல்வியினை தொடர்ந்து தனக்கான கவுரவமான வேலை என அனைத்திலும் தன்னை உயர்த்தி காட்டியுள்ளார் ப்ரீத்திஷா. இவர் ஒரு திருநங்கை.

‘‘திருநெல்வேலி, கல்யாணிபுரம் கிராமம்தான் என் சொந்த ஊர். என்னுள் ஏற்பட்ட மாற்றத்தால், 13 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். அதனால் படிப்பும் தொடர முடியவில்லை. பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக மும்பை சென்றேன். சிகிச்சைக்கு பின் நானும் எனது தோழியும் பூனே ரயில் நிலையத்தில் கீ செயின் விற்றோம்.

பொதுவாகவே திருநங்கைகள் என்றாலே கைத்தட்டி பிச்சை எடுக்கணும். பாலியல் தொழிலில் ஈடுபடணும் எனும் இந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என்ற காரணத்தால்தான் நானும் என் தோழியும் கீ செயின் விற்க ஆரம்பித்தோம். நாங்க வேலைக்கு போவதில் மற்ற திருநங்கைகளுக்கு உடன்பாடு இல்லை. எங்களை அடிச்சி துன்புறுத்தி ரயிலில் இருந்து தூக்கி வெளியில் எல்லாம் போட்டிருக்காங்க.

அதனால் அங்கிருந்து தில்லிக்கு போனேன். அங்கு தெருக்களில் நாடகம், திருநங்கைகளுடன் சேர்ந்து தெருக்கூத்துகளில் நடிச்சேன். அதன் பின் அங்கேயே ஒரு நாடக குழுவில் சேர்ந்து அவர்களுடன் தில்லி மட்டுமில்லாமல். பஞ்சாப், ஹரியானா, குஜராத் போன்ற இடங்களுக்கு சென்றேன். 2012-ல் சென்னைக்கு வந்துட்டேன். அதன் பிறகு நீதிமன்றத்தில் என்னுடைய மாற்றங்கள் குறித்து வழக்கு பதிவு செய்து, பள்ளி சான்றிதழ்களில் என்னுடய பாலின மாற்றங்களை செய்தேன். பிறகு அதே ஆண்டு பத்தாம் வகுப்பு படிச்சு முடிச்சேன். இதற்கிடையில் எனக்கு நடிப்பு மேல இருந்த ஆர்வத்தை பார்த்து, மணி குட்டி ஐயா அவர்கள் தான் என் குருநாதர் ஜெயராவ் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

அவரும் என்னிடம் கட்டணம் வாங்காமல் நடிக்க பயிற்சி அளித்தார். அதன் தொடக்கம் தற்போது வரை பாம்பு சட்டை, ஐங்கரன், வெள்ளையானை, வீரைய்யன் என பத்து தமிழ் படங்களில் நடிச்சிருக்கேன். அதைத் தவிர திருநங்கை குறித்து நானே கதை எழுதி தெருக்கூத்தில் நடிச்சேன். மேலும் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்றிருக்கிறேன். நான் கற்றுக் கொண்ட கலையினை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறேன்’’ என்றவர் 12ம் வகுப்பு மட்டுமில்லாமல் பர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

‘‘நடிப்பு துறையில் ஒரு பட்டம் பெற்றவுடன் எனக்கு அதே துறையில் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிச்சது. CUET தேர்வெழுதி தற்போது புதுச்சேரி
பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் மூலம் எம்.பி.ஏ(MPA) படிக்கிறேன். மேலும் சிலம்பம் பயின்று அதற்கான போட்டியிலும் பங்கு பெற்று வருகிறேன். 2012ல்தான் சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சேன். சினிமாவில் வாய்ப்பு என்பது ரொம்ப சுலபமா கிடைக்காது. இவ்வளவு வருடங்களில் பத்து படம் தான் நான் நடிச்சிருக்கேன். குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க தான் வாய்ப்பு கிடைக்கும். அதனால் பெரிய அளவில் வருமானம் இருக்காது. நாடகத்துறையும் அப்படித்தான்.

நம்முடைய மனதிருப்திக்காக நடிக்கலாம். மற்றபடி என் தேவைகளுக்காக சம்பாதிக்க வேண்டும் என்பதால் தான் உணவு டெலிவரி துறையில் வேலைக்கு சேர்ந்தேன். ஆரம்பத்தில் ஆண்களுக்கு நிகரா உங்களால் இந்த வேலையை செய்ய முடியாதுன்னு நிராகரிச்சிட்டாங்க. அதன் பிறகு ஒரு தொண்டு நிறுவனம் மூலமாக எனக்கு ஊபர் ஈட்ஸ் வேலை கிடைச்சது. ஒரு மாதம் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.

ஆனால் என் நிறுவனம் என்னை நல்லபடியா பார்த்துக்கிட்டாங்க. சில சமயம் நான் இரவு அதிக நேரம் டெலிவரி செய்ய நேரிட்டால், என் பாதுகாப்பினை கருதி சீக்கிரம் முடிக்க சொல்லிடுவாங்க. உணவு டெலிவரி செய்யும் துறையில் இந்தியாவின் முதல் திருநங்கை நான்தான். என்னை முன்னுதாரணமாக கொண்டு அதன் பிறகு பல பெண்களுக்கு உணவு டெலிவரி பாட்னர்கள் வேலை கொடுத்தாங்க. 2019-ல் டெலிவரி வேலையை ராஜினாமா செய்திட்டு டீ கடையை ஆரம்பிச்சேன்.

கொரோனா பாதிப்பால் கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அது எனக்கு பெரிய இழப்பினை ஏற்படுத்தியது. அதன் பிறகு கேன்களில் டீ விற்க ஆரம்பித்தேன். பிறகு தொண்டு நிறுவனத்தின் உதவியோடு ‘மகிழம் நடமாடும் டீ கடை’ ஆரம்பிச்சேன். அப்போது மீண்டும் ஊரடங்கு போட்டதால், கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. மறுபடியும் டீ கேன்கள்தான் எனக்கு உதவி செய்தது. அதில் வந்த பணத்தில் நான் குடியிருக்கும் இடத்தில் காய்கறி, பழங்கள், ஐஸ்கிரீம் மற்றும் பணியாரக்கடை என அனைத்தையும் விற்பனை செய்யும் கடையை வைத்தேன். ஆனால் அந்தக் கடைக்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் எனக்கான ஆதரவும் கிடைச்சது. இப்போது கோயம்பேடு மார்க்ெகட் அருகில் ஒரு டீக்கடையை நடத்தி வருகிறேன்.

நான் தற்போது புதுச்சேரியில் கல்லூரியில் படித்து வருவதால், என்னைப் போல் இரண்டு திருநங்கைகள்தான் என் கடையை பார்த்துக் கொள்கிறார்கள்’’ என்றவர் சிலம்பத்தின் மேல் ஏற்பட்ட ஆர்வம் குறித்து விவரித்தார்.‘‘ஒரு நாடக நடிகருக்கு உடல் மொழி மிகவும் அவசியம். அதன் அடிப்படையில்தான் நான் சிலம்பம், கலரி, நடனம் கற்றுக் கொண்டேன். சிலம்பத்திற்கான போட்டியில் கலந்து கொள்வதற்காக நான் என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும் போது, ஒரு விபத்தில் என் இடதுகையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

நான் முழுமையாக குணமாகும் வரை போட்டியில் கலந்துகொள்ள கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. ஆனால் என் மனவலிமையும், தன்னம்பிக்கையும் சிலம்பம் மாஸ்டர் அர்ஜுன் என் மேல் வைத்த நம்பிக்கையும் தான் என்னை ஊக்குவித்தது. ஒரு கையால் சிலம்பம் சுற்றி அந்த போட்டியில் நான் பங்கு பெற்றேன். ஜெயிக்குறோம் தோற்குறோம் என்பது
இரண்டாம்பட்சம். ஆனால் போட்டியில் பங்கு பெறவேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியமா இருந்தது. தற்போது ஜிம்னாஸ்டிக் பயிற்சியும் எடுத்து வருகிறேன்.

நான் கலைத் துறையில் வளர காரணம் என் குரு ஜெயராவ் அவர்கள்தான். நான் கலை பயின்ற இடம் என்னுடைய ேகாவில்னுதான் சொல்லணும். அங்கு நடந்த எந்த விஷயத்தையும் என்னால் மறக்க முடியாது. அவை அனைத்தும் நினைவுகளாக எப்போதும் என் மனதில் நீங்காமல் இருக்கும். நாம் வாழும் சமூகம் என்பது ஒரு நிலை கண்ணாடி. நாம என்ன செய்கிறோமோ அதைத்தான் சமூகம் என்கிற கண்ணாடி பிரதிபலிக்கும். இதுவரை நான் செய்த எந்தவொரு வேலையிலிருந்தும் நானாக பின்வாங்கவில்லை. சூழ்நிலை காரணமாக ஒதுங்கிவிட்டேன்.

என் பதிமூன்று வயதில் வீட்டிலிருந்து வெளியேறி வந்து தற்போது இந்த அளவிற்கு முன்னேறி இருக்கேன். இந்தப் பயணம் என்னை பக்குவப்படுத்தி இருக்கு. எல்லா சூழ்நிலையையும் எதிர்கொள்ள கற்றுக்கொண்டேன். திடீரென பட ஷூட்டிங்கிற்காக காரில் போவேன். அடுத்த நாள் அரசு பேருந்தில் பயணம் செய்வேன். இந்த மாதிரிதான் என் வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது. என் சூழலுக்கு ஏற்ப என் வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறேன்’’ என்றார் புன்னகையுடன் ப்ரீத்திஷா.

The post என் வாழ்க்கை பயணம் என்னை பக்குவப்படுத்தி உள்ளது! appeared first on Dinakaran.

Tags : Pritisha ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...